இந்திய மருத்துவ கவுன்சிலின் தொழில்நுட்பக்குழு தமிழகத்தில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நாமக்கல் ஆகிய  இடங்களில் புது மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான  அனைத்து முன்னேற்பாடுகளையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆறு கல்லூரிகள் நிறுவப்பட்டால் 2020 ம் ஆண்டிற்கான மருத்துவ சேர்க்கையில் தமிழ்நாட்டில் மட்டும் 900 எம்பிபிஎஸ் சேர்க்கைகள் கூடுதலாக நடத்தப்படும். இதனால், அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 4,150 க உயர வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

நிலம் கையகப்படுத்துதல், மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் நியமித்தல் போன்ற பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. மேலும், ராஜா முத்தியா மருத்துவக் கல்லூரி, இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி, கே.கே.நகர் மற்றும் ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரி போன்ற ஆய்வுகளை மேற்கொள்ளும் மூன்று வகை பி  பிரிவு மருத்துவக்கல்வி நிறுவனங்கள் என மொத்தம் 30 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.