5100 crore diamond seized by Income tax officers

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் சட்ட விரோதமாக பண பறிமாற்றம் செய்த நகை வியாபாரி நீரவ் மோடியின் கடைகளில் இருந்து 5100 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளை வருமான வரித்துறையினர் அள்ளிச் சென்றனர்.

குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நிரவ் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் தனது நகை ஷோரூம்களை வைத்துள்ளார். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து சுமார் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக வங்கி சார்பில் சி.பி.ஐ.யிடம் நேற்று இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டது.

முறையான தகவல்களை அளிக்காமல் 280 கோடி ரூபாய் முறைகேடாக கடன் பெற்றதாக கூறி ஏற்கனவே அவர் மீது கடந்த மாதம் 29-ம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. அதனை தொடர்ந்து, 31-ம் தேதி அவரது நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

தொடர் புகாரை அடுத்து தொழிலதிபர் நிரவ் மோடி, சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக மும்பையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.. இதற்கிடையே, நீரவ் மோடி கடந்த மாதம் 1 ஆம் தேதியே இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டார்.

நிரவ் மோடி மட்டுமல்லாமல், அவரது மனைவி, சகோதரர் என இவ்விவகாரத்தில் தொடர்புடைய முக்கிய நபர்கள் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நிரவ் மோடிக்கு சொந்தமான 17 கடைகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில், ரூ.5100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரங்கள் மற்றும் விலை மதிப்பு மிகுந்த கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதே போன்று வங்கிக்கணக்கில் இருந்த 4 கோடி ரூபாய், நிரந்தர வைப்பு நிதியும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.