சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கூட்டணி அரசு, துணை முதலமைச்சர் பதவி என்பன உள்ளிட்ட பல்வேறு பகீர் வியூகங்களுடன் பாமக தேர்தல் களத்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி பாமக களம் இறங்கியது. ஒரு தொகுதியில் கூட பாமகவால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் வட மாவட்டங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பாமக உருவெடுத்தது. பல்வேறு தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பை இழக்க பாமக காரணமாக இருந்தது. மிக சொற்ப வாக்குகளில் திமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். அந்த தொகுதிகளில் எல்லாம் பாமக கணிசமான வாக்குகளை பெற்றது. அந்த வகையில் பாமக கடந்த தேர்தலில் பாமக கூட்டணியில் இடம் பிடித்து இருந்தால் திமுக ஆளும் கட்சியாக இருந்திருக்கும்.

ஆனால் கடந்த தேர்தலில் பாமக பல முறைஅழைப்பு வந்தும் அதனை நிராகரித்து தனித்து களம் இறங்கியது. அதற்கு காரணம் 1996க்கு பிறகு சுமார் 20 வருடங்களாக அனைத்து தேர்தல்களிலும் திமுக, அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி அமைத்தே பாமக தேர்தலை சந்தித்து வந்தது. தங்களது பலம் என்ன என்பதை தெரிந்து கொள்ள தனித்து களம் இறங்க வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் திமுக தரப்பில் இருந்து வந்த மிகப்பெரிய ஆபர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு 234 தொகுதிகளிலும் பாமக களம் இறங்கியது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் போட்டியிட்டு சுமார் ஐந்தரை சதவீத வாக்குகளை பாமக பெற்றது. 

அதே சமயம் வட மாவட்டங்களில் மட்டும் கணக்கு எடுத்துக் கொண்டால் சில தொகுதிகளில் அதிமுக, திமுகவிற்கு நிகராக பாமக வாக்ககுளை பெற்றது. வட மாவட்டங்களில் பாமக பலம் வாய்ந்த தொகுதிகளை மட்டும் கணக்கிட்டால் சராசரியாக 20 சதவீத வாக்குகளை பாமக பெற்றிருந்தது. அதோடு மட்டும் அல்லாமல் தமிழகத்தின் 3வது பெரிய கட்சியாகவும் பாமக உருவெடுத்தது. இதனை மனதில் வைத்து தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாநிலங்களவை எம்பி மற்றும் 7 தொகுதிகளை கொடுத்தது அதிமுக. தேர்தலில் வெற்றி பெற இயலவில்லை என்றாலும் வாக்கு வங்கியை பாமக தக்க வைத்துக் கொண்டது.

தற்போதும் பாமக அதிமுக கூட்டணியில் நீடித்து வருகிறது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன்கூட்டணி தொடருமா என்கிற கேள்விக்கு பாமக தரப்பில் இருந்து உறுதியான எந்த பதிலும் வரவில்லை. இதற்கிடையே அதிமுக, திமுகவை போல பாமகவும் தேர்தல் வியூகத்தை தொடங்கியுள்ளது. கடந்த தேர்தல்களை போல் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் கூட்டணி அமைக்க பாமக தயாராக இல்லை. மாறாக தேர்தலுக்கு முன்பே கூட்டணி அரசு என்கிற நிபந்தனையை முன்வைத்து கூட்டணி பேச பாமக முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

அதிலும் பாமகவிற்கு துணை முதலமைச்சர் பதவி, 51 தொகுதிகள் என்கிற முன்வைப்புடன் தான் பாமக பேச்சுவார்த்தையையே தொடங்கும் என்கிறார்கள். தற்போதைய சூழலில் திமுகவும் சரி அதிமுகவும் சரி கூட்டணி பலம் இல்லாமல் வெல்ல முடியாது. இதனை பயன்படுத்திக் கொண்டு பாமகவிற்கு தேர்தலில் கணிசமான தொகுதிகளை அறுவடை செய்வதுடன் ஆட்சியிலும் பங்கெடுப்பது என்கிற தனது நீண்ட கால கனவை நினைவாக்கிக் கொள்ள ராமதாஸ் காய் நகர்த்தி வருகிறார். திமுக தரப்பில் இருந்து கூட்டணி தொடர்பாக பாமகவிடம் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் திமுக தரப்பிடம் 51 தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவிபோன்ற நிபந்தனைகளை பாமக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக சொல்கிறார்கள். அதிமுக கூட்டணியை விட திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக பாமக கருதுகிறது. எனவே டீல் ஓகே என்றால் அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டு திமுக கூட்டணிக்கு செல்லவும் பாமக தயங்காது என்கிறார்கள். அதே சமயம் கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவும் 51 தொகுதிகள் மற்றும் துணை முதலமைச்சர் பதவி என்கிற நிபந்தனையை முன்வைத்தது.

அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைக்கு முன்பே கூட்டணி அரசில் பங்கு என்று திமுக அறிவிக்க வேண்டும் என்கிற தேமுதிகவின் நிபந்தனை தான் திமுகவை எரிச்சல் படுத்தி கூட்டணிக்கு வேட்டு வைத்தது. அதே பாணியில் தற்போது பாமகவும் தேர்தலுக்கு முன்பே கூட்டணி அரசு குறித்த நிபந்தனையை முன்வைத்தால் அதனை திமுக எப்படி ஏற்கும் என்று தெரியவில்லை. அதே சமயம் அதிமுக தரப்பு இந்த விஷயம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கும் என்கிறார்கள். எது எப்படியே கடந்த 2016 தேர்தல் முடிவுகள் பாமகவை பேரம் பேசி பணிய வைக்கும் ஒரு நிலையில் வைத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.