கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீ குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ50ஆயிரம் கடன் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.இந்த அறிவிப்பு ஏமாற்றும் வேலையென்றும் இது பற்றிய உத்தரவு எந்த கூட்டுறவு வங்கிகளுக்கும் வரவில்லை.அந்த வங்கி அதிகாரிகளுக்கே இதுபற்றி தெரியவில்லை.மக்களை ஏமாற்றுவதையே வாடிக்கையாக்கி வைத்திருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜீ என்று குற்றம்சாட்டியிருக்கிறார் அமமுக தலைவர் டிடிவி தினகரன்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்....,'குடும்ப அட்டை வைத்திருக்கும் சிறு வணிகர்களுக்கு ரூ.50,000 கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக செய்திகள் வருகின்றன.அப்படியொரு கடன் திட்டம் பற்றி தங்களின் கவனத்திற்கே வரவில்லை என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுவதாக தகவல்கள் வருகின்றன. கொரோனா துயரால் ஏற்கனவே அல்லல்படும் மக்களை இப்படி அலைக்கழிப்பது வேதனைக்குரியது.

அமைச்சரின் அறிவிப்பு உண்மையா? அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதா? அப்படி ஒதுக்கப்பட்டிருந்தால் அந்த கடனைப்  பெறுவதற்கான வழிமுறைககள் என்ன ? - என்பனவற்றை எல்லாம்  தெளிவாகவும், வெளிப்படையாகவும் தமிழக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்,' எனத் தெரிவித்துள்ளார்.