சென்னை வந்த அமித் ஷா சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு 50 தொகுதிகளை உறுதிப்படுத்தி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதுடன் குழப்பத்திற்கும் ஆளாக்கியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அமித் ஷா முன்னிலையில் உறுதிப்படுத்தினர். ஆனால் அமித் ஷா கூட்டணி குறித்து எதையும் வெளிப்படையாக பேசவில்லை. ஆனால் தமிழகத்தில் சிறப்பான அரசு நடைபெற்று வருவதாக பாராட்ட மட்டும் செய்திருந்தார். இதனை அடுத்து சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் அமித் ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது நடந்தது என்ன என்று அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. இதே போல் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோ என எதுவும் வெளியாகவில்லை. இதனால் அங்கு நடந்தது என்ன என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் ஓபிஎஸ் – இபிஎஸ் உடனான சந்திப்பின் போது சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கான தொகுதிகளின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அதிலும் பாஜகவிற்கு சுமார் 50 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என்று சில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த செய்தி அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவிற்கு சுமார் 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பத்து சதவீத வாக்கு வங்கி வைத்திருந்த தேமுதிகவிற்கே 41 தொகுதிகளைத்தான் ஜெயலலிதா ஒதுக்கியிருந்தார். இதே போல் கடந்த 2001 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜகவிற்கு வெறும் 21 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. இதன் பிறகு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளுமே சேர்த்துக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் தான் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 50 தொகுதிகள் என செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே அதிமுகவினர் பலர் பாஜகவுடனான கூட்டணியை ஏற்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் தோல்விக்கு காரணமே பாஜகவுடனான கூட்டணி தான் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு 50 தொகுதிகளை அதிமுக வழங்க உள்ளதாக வெளியாகும் செய்திகள் அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நிர்வாகிகள் பலர் இது தொடர்பாக தலைமை கழகத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு கேட்டு வருகின்றனர்.

ஆனால் தலைமை கழகத்தில் அதிகாரத்தில் இருக்கும் எவருக்கும் இந்த 50 தொகுதி விஷயம் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. அப்படி என்றால் அமித் ஷா – எடப்பாடி – ஓபிஎஸ் சந்திப்பின் போது நடந்தது என்ன என்று நிர்வாகிகள் மேலிட நிர்வாகிகளை குடைய ஆரம்பித்துள்ளனர். அது குறித்தும் அவர்களுக்கு எந்த தகவலும் இல்லை. இதனால் உண்மையில் பாஜகவிற்கு அதிமுக 50 தொகுதிகளை வழங்க உள்ளதா? அல்லது இது வெறும் வதந்தியா என அதிமுகவினர் குழப்பம் அடைந்துள்ளனர்.

இதனிடையே இந்த தகவல் வெறும் வதந்தி தான் அதுவும் திமுக ஆதரவு பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் செய்த வேலை இது என்று அதிமுக மேலிட நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அமித் ஷா – ஓபிஎஸ – இபிஎஸ் சந்திப்பின் போது தொகுதிப் பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை மட்டுமே நிறைவு பெற்றுள்ளதாகவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எத்தனை தொகுதிகள் தேவை என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் அதிமுக எத்தனை தொகுதிகளை ஒதுக்க இயலும் என்று ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பில் அப்போது பதில் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மற்றபடி 50 தொகுதிகள் என்கிற பேச்சே எழவில்லை என்றும் அதிமுக தரப்பு தெரிவிக்கிறது.

பாஜக மேலிடம் 40 தொகுதிகள் என ஆரம்பித்து தற்போது 30 தொகுதிகள் என வந்திருப்பதாகவும் ஆனாலும் கூட அதிமுக ஆட்சிமன்ற குழு கூடித்தான் இதனை இறுதி செய்யும் என்று ஓபிஎஸ் – இபிஎஸ் கூறிவிட்டு வந்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.