தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கு தானே போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவரான கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சியை ஆரம்பித்த கிருஷ்ணசாமி கடந்த1996 தேர்தலில் கொடியன்குளத்தை உள்ளடக்கிய ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

அடுத்து இரண்டாவது முறையாக 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். அதே போல் தென்காசி தொகுதியில் 5 முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தொடர்ச்சியாக தோல்வியை தழுவினார். 

இம்முறை எப்படியும் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என களத்தில் குதித்துள்ளார். அரசியலில் பரம எதிரிகளாக இருக்கும் திமுகவும், அதிமுகவும் தென்காசி மக்களவைத் தொகுதியில் இதுவரை நேருக்கு நேர் சந்திக்கவில்லை. இந்த முறையும் அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.