5 மாநில தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அடி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின் 5 மாநில தேர்தல் முடிவுகளில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வென்றுள்ளதை எல்லாத் தலைவர்களும் வரவேற்றிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல் ஒரு மினி நாடாளுமன்றத் தேர்தல் போன்றது. எனவே, இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று இருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தி.மு.கவின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். 

பாசிச ஆட்சிக்கு எதிராக புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சியினுடைய தலைமையில் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து கட்சியினுடைய தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.  அந்தக் கூட்டம்  நடைபெற்று இன்றைக்கு வெற்றிச் செய்தியாக இந்தச் செய்தி வந்து சேர்ந்திருக்கிறது. இந்தச் செய்தி நிச்சயமாக வர இருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு முழுமையான வெற்றியாக வரும் என்ற நம்பிக்கை  எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது. 

குறிப்பாக பாஜவின் கோட்டையாக விளங்கிய மாநிலங்களிலேயே காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றி என்பது பிரதமராக இருக்கக்கூடிய மோடிக்கு கிடைத்திருக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய அடி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதுதான் மோடியினுடைய ஆணவத்தினுடைய உச்சகட்டம். அவர் அப்படிச் சொன்ன காரணத்தால் இப்பொழுது நாங்கள் பா.ஜ.க இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று எந்தக் காரணத்தைக் கொண்டும் சொல்ல மாட்டோம். முறையாக வர இருக்கக்கூடிய தேர்தலில் மதவாதம் பிடித்திருக்கக் கூடிய ஆட்சியை ஒழிப்பதற்கு வேற்றுமை இல்லாத, மோதல் இல்லாத, மதவாதம் இல்லாத ஒரு ஆட்சியை உருவாக்குவதற்கு முயல்வோம்" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.