நல்ல தண்ணீர் என பாஜக கூறும் வடமாநிலங்களிலேயே தாமரை மலரவில்லை, இங்கு எப்படி மலரும் என திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மோடி அலை ஓய்ந்துவிட்டது, நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தோல்வியை தழுவும் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.  

5 மாநில தேர்தல் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் ஒரு மாநிலத்தில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாததும், காங்கிரஸ் அடைந்துள்ள எழுச்சியும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக அமைந்துள்ளது என்றார். பாஜகவிற்கு மாற்று காங்கிரஸ் பிரதமர் மோடிக்கு மாற்று ராகுல் காந்தி என இந்த தேர்தலில் நிரூபணமாகியுள்ளது. 

பெரும்பாலான எதிர்கட்சிகள் ஒன்றுகூடி மோடியை வீழ்த்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்த வெற்றி காங்கிரசுக்கு மகத்தான வெற்றி மற்றும் எதிர்காலம் இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளது. பா.ஜ.க. அரசுகளும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதன் விளைவு தான் இந்த தேர்தல் தோல்வி என்றார். நல்ல தண்ணீர் என கூறும் வடமாநிலங்களிலேயே தாமரை மலரவில்லை, இங்கு எப்படி மலரும் என திருநாவுக்கரசர் நக்கல் செய்துள்ளார். 

வட மாநிலங்களில் மத்தியபிரதேசம் தான் இந்துத்துவாவுக்கு வலிமையான இடம். ஆர்.எஸ்.எஸ்.சின் கருவறை அந்த மாநிலம் தான். அங்கேயே கருச்சிதைவு செய்யப்பட்டுள்ளது. மோடி அலை ஓய தொடங்கிவிட்டது. ராகுல் அலை வீச தொடங்கி இருக்கிறது என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.