மத்தியப் பிரதேசத்தில் பாஜக இப்படி பலத்த அடி வாங்கும் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை. மற்ற மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட கருத்து கணிப்புப்படியே வந்திருக்கிறது. மோடியின் செல்வாக்கு சரிந்ததை அறிந்தும் அவரது பெயரை  வார்த்தைக்கு வார்த்தை உச்சரித்ததும் இந்த தோல்விகளுக்கு காரணம் என்கிறார்கள். 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வந்த சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் செல்வாக்கு சரிந்து போனதற்கு மூச்சுக்கு முன்னூறு முறை மோடி மோடி என உச்சரித்ததும் தோல்விக்கு முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகிறார்கள்.

 

 நாடி நரம்பெல்லாம் துடிக்க மோடி பெயரை வரும் நாடாளுமன்ற தேர்தலின்போதும் உச்சரித்தால் இரண்டு இலக்கத்தில் பாஜக வெற்றி பெறும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களே முணுமுணுத்து வருகின்றனர். ஏற்கெனவே மோடிக்கு எதிரான மாநிலங்களில் முக்கியமானது தமிழகம். பதினைந்து ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த மாநிலங்களையே பறிகொடுத்துள்ளது பாஜக. இந்தநிலையில், அக்கட்சியின் தோல்வியை தமிழக அரசியல் கட்சிகள் மகிழ்ச்சியோடு பார்க்கின்றன. 

குறிப்பாக டி.டி.வி,தினகரனை ரொம்ப சந்தோஷப்படுத்தி இருப்பதாகக் கூறுகிறார்கள் அமமுக நிர்வாகிகள். ’நான் கடவுளை வேண்டியது வீண் போகவில்லை. தாமரைக்கு படுதோல்வி’ என்று தன் சகாக்களிடம் சொல்லி சந்தோஷப்படுவதாக கூறுகின்றனர் டி.டி.வி.,யின் அடிபொடிகள். அதற்கு எதிர்மாறாக அதிமுக வட்டாரத்தில் சோகம் இழையோடுகிறதாம். ’’பாஜகவின் இதே நிலை மக்களவை தேர்தலிலும் எதிரொலித்தால் நம் கதை அம்போதான். எனவே பாஜகவை மட்டும் நம்பி இருக்கக்கூடாது. கட்சியை வலுப்படுத்துங்க. மக்களவை தேர்தலில் குறைந்தது 20 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும்.  

அப்போதுதான் மத்தியில் ஆட்சி மாறினாலும் நம் ஸ்திரத்தன்மையோடு இருக்க முடியும். மத்தியில் யார் வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் நம்மை கைவைக்க மத்திய ஆட்சியாளர்கள் தயங்குவார்கள். தோற்றோல் நம் கதி அதோ கதிதான். டி.டி.வி ஒருபக்கமும், ஸ்டாலின் மறுபக்கமும் நம்மை சிதைத்து விடுவார்கள்’’ என அதிமுகவின் மூத்த தலைவர்கள் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். ஆக, அதிமுக இப்போதிருந்தே கரன்சியை இறக்க திட்டமிட்டு இருக்கிறது அதிமுக தலைமை. அதற்காக அமைச்சர்களை அழைத்து கரன்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக கோட்டைவட்டாரங்கள் கும்மியடிக்கின்றன.