சோனியா காந்தி உத்தரவிட்டதை அடுத்து 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர்.
சோனியா காந்தி உத்தரவிட்டதை அடுத்து 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர். உ.பி., பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அங்குள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் 18 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. மீதமுள்ள 92 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. உ.பி.யில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் காங்கிரஸ் போட்டியிட்ட 97 சதவீத இடங்களில் டெபாசிட்டை இழந்தது.

பஞ்சாப் தோல்வியை தொடர்ந்து இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை ராஜஸ்தான், சட்டீஸ்கர் என 2 ஆக குறைந்துள்ளது. தேசிய அளவில், பிரதான எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தரத் தலைவர் இல்லாமல் இருப்பதே இந்தத் தோல்விக்கு காரணம் என்று அரசியல் வல்லுநர்கள் விமர்சனம் செய்து வந்தனர். ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டார்.

அதையடுத்து கோவா, உத்தரகாண்ட் மாநில தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் இன்று காலை பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் வார்ரூமில் இருந்து, உத்தரபிரதேச தேர்தல் தோல்வி குறித்து உத்தர பிரதேச தேர்தல் பொறுப்பாளரும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, 5 மாநில காங்கிரஸ் தலைவர்களும் தங்களது தலைவர் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
