கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சாலையோரம் தூங்கி  கொண்டிருந்த முதியரை தட்டி எழுப்பி அவரிடம் இருந்தே லைட்டர்  வாங்கி அவரை தீயிட்டு கொளுத்தி கொடூரமாக  கொலை செய்த சிறுவர்களை போலீசார் பிடித்துள்ளனர்.  மதுரையை சேர்ந்த 5 சிறுவர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். 60 வயதான இவர், கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகன்களுடன் பிரச்சனை ஏற்பட்டு வீட்டிலிருந்து வெளியேறிய இவர், பத்தாண்டுகளாக வீட்டிற்கு  செல்வதில்லை. இருளப்பபுரம் வட்டாரத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் தங்கிவிட்டு பகலில் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலையில்   சந்திரனின் உடலில்  பாதி தீப்பிடித்து எரிந்த நிலையில் நாகர்கோயில் இருளப்பபுரம் பகுதியில் ஒரு வீட்டின் வாசலில்  போலீசார்  அவரசு சடலத்தை கைப்பற்றினர். 

இந்நிலையில் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், இளப்பபுரம் பகுதியில்  உள்ள ஆக்கர்கடை ஒன்றில் மதுரையை சேர்ந்த 5 சிறுவர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்களில் ஒரு சிறுவனின் காதலி செல்போணில் பேசாமல் இருந்த காரணத்தால் விரக்தியில் நேற்று இரவு நண்பர்களுக்கும் மது வாங்கி கொடுத்துள்ளான். இந்நிலையில் 5 பேரும் மது போதை தலைக்கேறிய நிலையில், வழி நெடுகிலும் பல்வேறு கார்கள்  மீதும் கல்லெறிந்த வண்ணம் வந்துள்ளனர். 

"

இந்நிலையில் சாலையோரம்  தூங்கி  கொண்டிருந்த சந்திரனை எழுப்பி அவரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர். அப்போது அவர் தீப்பெட்டி இல்லை லைட்டர்  தான் இருக்கு என்று கூறி, லைட்டரை கொடுத்துள்ளார்.  லைட்டரை வாங்கிய சிறுவர்கள் அவரது வேட்டியில் பற்றவைத்துள்ளனர். இதில் உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில், சிறுவர்கள் அங்கிருந்து எந்த அச்ச உணர்வும் இல்லாமல் சென்றுள்ளனர். இவை அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சிறுவர்களை விசாரணை மேற்கொண்ட கோட்டாறு போலீசார். 5 சிறுவர்களையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.