சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை 4  நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  கொரோனா பரிசோதனை மேற்கொள்வது குறித்தும் ஆலசனைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கூட்டப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவுபெற்றது. ஏப்ரல் 9ஆம் தேதி வரை  சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது மார்ச் 31-ம் தேதி நிறைவு பெற்றது. பொதுவாக சட்டமன்றம், பாராளுமன்றம்  போன்றவைகள் 6 மாத இடைவெளிக்குள் கண்டிப்பாக கூட்டப்பட வேண்டும் என்பது அரசியல் சாசனத்தின் விதி. 

அந்த வகையில் தமிழகத்தில் சட்டமன்றம் கூட்டப்பட்டு செப்டம்பர் மாதத்துடன் ஆறு மாதம் முடிவடைகிறது. எனவே அதற்குள் சட்டமன்றத்தை கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதேவேளையில் கொரோனா தொற்று  தீவிரமாக உள்ளதால் தற்போதுள்ள சட்டசபையில் கூட்டத்தொடரை நடத்த இயலாது என்பதால், கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தை நடத்துவது குறித்து சட்டமன்ற அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு நடத்தியுள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் நான்கு நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அக்கூட்டத்திற்கு முன்பாக  சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வது தொடர்பாக, சுகாதார செயலாளர்களுடன் சபாநாயகர் ஆலோசித்து முடிவு செய்யவுள்ளார். என்றும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல், கொரோனா குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம், 110 விதியின் கீழ் முதமைச்சரின் புதிய அறிவிப்புகள் போன்றவை கூட்டத்தொடரில் இருக்கும் என்று கூறப்படுகிறது.  கலைவாணர் அரங்கத்தில் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு ஒரிரு தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.