அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடங்கிவிட்டன. அதே நேரத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் போன்றோர் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட மற்றும் தொகுதி செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்றுப் பேசிய சரத்குமார் ,  சென்னை- சேலம் 8 வழிச்சாலையால் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்பட எவரும் பாதிக்காத வகையில் உயர்த்தப்பட்ட சாலையாக அமைக்க வேண்டும் என்றும். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நாடாளுமன்றத்துடன், சட்டசபைக்கும் தேர்தல் நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆந்திர மாநில முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி உருவாக வேண்டும் என்பதே எனது கருத்து என்றும்,  இதற்காக கேரளா, கர்நாடகா, தெலுங்கானா முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசவுள்ளதாகவும் சரத்குமார் கூறினார்.