வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ள விடுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் சென்னை  மாநகராட்சி ஆணையர் கே. பிரகாஷ் ஆகியோர்  ஆய்வு மேற்கொண்டனர் .  கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது ,  அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை  6009 ஆக உயர்ந்துள்ளது .  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது , இந்நிலையில் பல்வேறு வெளிநாடுகளில்  சிக்கித் தவித்து வந்த தமிழர்களை அரசு விமானம் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வந்துள்ளது .  துபாய் நாட்டில் இருந்து 358 பயணிகளுடன் இரண்டு விமானங்கள் இன்று அதிகாலை ஒரு மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 

கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதித்து அவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்க பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது அதன்படி இன்று அதிகாலை வருகை புரிந்த பயணிகள் அனைவருக்கும்  பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த மாதிரி சேகரிப்பு மையத்தில் தடவல் மாதிரிகள்  சேகரிக்கப்பட்டுள்ளன .  பின்னர் பயணிகள் அனைவரையும்  பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி ) திரு ஜே மேகநாதன் அவர்களின் மேற்பார்வையில் பேருந்துகளில் சமூக இடைவெளியுடனும் பொது சுகாதாரத் துறையின் பாதுகாப்பு நடைமுறையின்படியும் அழைத்துச் செல்லப்பட்டு விடுதிகளில் தனிமைப்படுத்தி தங்கவைக்கப்பட்டுள்ளனர் . அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி கண்காணிப்பில் 82 பயணிகள் ராயல் ரீஜென்சி ஹோட்டலிலும் 24 பயணிகள் ஹில்டன் ஹோட்டலில் மீதம் உள்ள நபர்கள் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் விஐடி பல்கலைக் கழக விடுதியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

ராயபுரம் மண்டலம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ராயல் ரீஜென்சி ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி மற்றும் அரசு முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு கே பிரகாஷ் ஆகியோர்  நேரில் சென்று விடுதி மேலாளரிடம் கேட்டறிந்தனர் பின்னர் பயணிகளின் உடல் நலன் குறித்து நாள்தோறும் மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள் கேட்டறிந்து கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர் இந்த ஆய்வின்போது துணை ஆணையாளர் திரு ஜே மேகநாதன் அவர்கள் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர் என சென்னை மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது .