தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேடைக்கு மேடை உதிர்க்கும் வார்த்தைகள் ‘அம்மாவின் வழிகாட்டுதல் படி நடக்கும் இந்த ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.’ என்பதுதான். ஆனால் அதே அ.தி.மு.க.வின் முக்கிய அங்கமான அன்வர்ராஜா எம்.பி.யின் மகன் விவகாரத்தில் அசிங்கப்பட்டு நிற்கிறது அம்மாவின் அரசு!...என பொங்குகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

70 வயதான அ.தி.மு.க. எம்.பி.யான அன்வர்ராஜா கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னை விட மிக சிறிய பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை பரபரப்பாய் தமிழகத்தில் அலசப்பட்டது. ’ஜெயலலிதா இருந்திருந்தால் இவரெல்லாம் இப்படி ஆடுவாரா?’ என்று அ.தி.மு.க. தொண்டர்களே விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் அன்வர்ராஜாவின் மகன் நாசர் அலியின் திருமணம் சமீபத்தில் காரைக்குடியில் நடந்தது. அப்போது அந்த திருமணத்தை தடுத்து நிறுத்திட கோரி தனியார் கட்டிடத்தின் சுவரேறி குதித்த ரோபினா எனும் பெண், இயலாமையில் கதறி அழுத விவகாரம் தமிழ் மக்களை கவலையுடன் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால் அவரது போராட்டத்தையும் மீறி திருமணம் நடந்து முடிந்துவிட்டது.

நாசர் அலியின் கல்யாணத்தை ஏன் தடுக்க முயன்றேன்? என்று கண்ணீருடன் பேசியிருக்கும் ரோபினா, “நானும் நாசர் அலியும் மூன்று ஆண்டுகளாக கணவன் - மனைவியா சேர்ந்து வாழ்ந்தோம். அது அவரது குடும்பத்துக்கும் தெரியும். அன்வர்ராஜா சென்னைக்கு வந்தால் எனக்கு போன் பண்ணி ‘நாசரை வரச்சொல்லும்மா’ என்று சொல்வார். அந்தளவுக்கு அந்யோன்யம்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி மூன்றாவது திருமணம் செஞ்சுக்கிட்ட அன்வர்ராஜாவின் இரண்டாவது மனைவியோட இரண்டாவது மகன் தான் நாசர் அலி.
சினிமா எடுக்கப்போறதா சொல்லி என்கிட்ட இருந்து ஐம்பது லட்சத்தை வாங்கி ஏமாத்திட்டார்.

என்னையும், என் பணத்தையும் நல்லாவே பயன்படுத்திக்கிட்டு இப்போ வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டார். இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி, எனக்கு நியாயம் வழங்கிட கேட்டு முதல்வர், துணை முதல்வர் ரெண்டு  பேரிடமும் புகார் மனு கொடுத்தென் ஆனால் எந்த நியாயமும் கிடைக்கலை.

என் கூட நாசர் அலி குடும்பம் நடத்துனது, அன்வர் ராஜா உள்ளிட அவரோட மொத்த குடும்பத்துக்கும் தெரியும். ஆனாலும் என்னை ஏமாத்திட்டாங்க. என்னோட சாபமும், பாவமும் அவங்களை சும்மா விடாது.” என்று கொதித்திருக்கிறார்.

இந்நிலையில் அன்வர்ராஜா எம்.பி.யோ “நாசர் அலியும், அந்த பொண்ணும் சினிமா தொழில் செஞ்சுட்டிருந்தாங்க. அப்போ நடந்த பங்ஷன்ல எடுத்த போட்டோக்களை காட்டி புகார் கொடுத்திருக்காங்க அந்த பொண்ணு. அவர் சொல்லும் பண மோசடி உள்ளிட்ட எந்த புகாரும் உண்மையானதில்லை.” என்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இதற்கிடையில் சென்னை, ராமநாதபுரம், காரைக்குடி பள்ளிவாசல் என எல்லா இடங்களிலும் வெளிப்படை புகார் கொடுத்துள்ளார் ரோபினா. எனவே அதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது, நாசர் உண்மையிலேயே தவறுகள் செய்திருக்கிறாரா அல்லது ரோபினா தான் பொய் சொல்கிறாரா என அ.தி.மு.க.வின் அதிகார மையம் விசாரித்திருக்க வேண்டும்.

அதைவிட்டு பெண் போலீஸை வைத்து ரோபினாவை சுற்றி வளைத்து மடக்கியது பெரிய தவறு. இந்த பாவத்துக்காக அந்தப் பெண்ணிடம் என்ன பதில் சொல்லப்போகிறது அ.தி.மு.க.? என்கிறார்கள் விமர்சகர்கள்.

இந்த விவகாரம் இத்தோடு முடியுமா அல்லது வேறு வகையில் வெடிக்குமா என்பது புரியவில்லை.