தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேரிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதறுவது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

அமமுக கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருதாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 பேர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆதாரத்துடன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து 3 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனையடுத்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சட்டப்பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க. ஜனநாயக படுகொலை செய்வதாக ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். ஆனால் ஜனநாயக படுகொலைக்கு சொந்தக்காரர்கள் தி.மு.க.வினர் தான் என விமர்சனம் செய்தார். மேலும் 1972-ம் ஆண்டில் எம்.ஜி.ஆர் கட்சி அமைத்தபோது திமுக கொடுத்த இடைஞ்சலும், 1989-ம் ஆண்டு சட்டப்பேரவையில் ஜெயலலிதா முடியை பிடித்து இழுத்து அவமானப்படுத்தியும் ஜனநாயக படுகொலை செய்தது திமுக தான் என்பதை நாடே அறியும். 

இந்நிலையில் இப்போதைய சூழலில் கட்சியும் ஆட்சியும் நிலைக்க வேண்டும் என்பதற்காக கட்சியின் கொறடா கட்சி தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரியுள்ளார். ஆதாரத்தின் அடிப்படையில் விளக்கம் கேட்டு 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதற்கு தி.மு.க. பதறுவதை பார்த்தால் திமுகவின் ‘பி’ டீம்தான் இந்த மூன்று எம்.எல்.ஏக்கள் என்பது திட்டவட்டமாக தெரிகிறது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.