தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு பிறகு திமுகவுக்கு கூடுதலாக 3 எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் பேசினார்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில், திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலுக்கு பின்னர், திமுகவுக்கு கூடுதலாக 3 எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள் என தருமபுரியில் இன்று நடந்த திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது. மக்கள், திமுக வேட்பாளரை ஆதரிக்க முன் வந்துள்ளனர். இந்த தேர்தலுக்கு பின்னர், திமுகவுக்கு கூடுதலாக 3 எம்எல்ஏக்கள் வருகிறார்கள்.

தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் இந்தியாவில் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தமிழகம் 18வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. உலக வங்கியும், மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில் பகிரங்கமாக தெரியவந்துள்ளது.

தொழில் தொடங்குவதற்கு ஏற்ற 340 அம்ச ‘‘தொழில் சீர்திருத்த திட்டங்களை’’ மத்திய அரசு அறிவித்தது. நிறைவேற்றப்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள் அடிப்படையில் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய அரசின் தொழில் துறை வெளியிட்டிருக்கிறது.

அண்டை மாநிலங்களான ஆந்திராவும், புதிதாக உருவான தெலுங்கானா மாநிலமும் இந்த சீர்திருத்தங்களை முறையாக நிறைவேற்றி நாட்டின் முதல் மற்றும் 2ம் இடத்தை தட்டிச் சென்றிருக்கின்றன. ஆனால் அந்த சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்டியதால் இன்றைக்கு தமிழகம் 18வது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது.

அது மட்டுமல்ல, தென் மாநிலங்களில் கர்நாடக மாநிலத்தையும் விட பின்தங்க செய்திருக்கிறது. வெளிப்படைத்தன்மை, ஒற்றை சாளர முறை, தொழில் தொடங்குவதற்குரிய நிலம் வழங்குவது, கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிப்பது, சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது ஆகிய 5 சீர்திருத்தங்களையும் மிக முக்கியமாக எடுத்துக்கொண்டு மத்திய அரசு இந்த தரவரிசை பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

முக்கிய சீர்திருத்தங்களிலும் தமிழகத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பதை பார்க்கும்போது கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்றது ஆட்சியல்ல.

மேற்கண்ட தொழில் செயல் திட்ட சீர்திருத்தங்களை நிறைவேற்றி 90 முதல் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாநிலங்கள் தொழில் வளர்ச்சிக்கு தலைமை ஏற்கும் மாநிலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 70 முதல் 90 மதிப்பெண்கள் பெற்ற மாநிலங்கள் தொழில் வளர்ச்சிக்கு தலைமை ஏற்க ஆர்வத்துடன் முன்வரும் மாநிலங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரு பட்டியலிலுமே தமிழகம் இடம்பெறவில்லை.

முன்னதாக நேற்று இரவு மு.க.ஸ்டாலின் தர்மபுரியில் நடக்கும் திருமணத்தில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார். கார் வேலூர் அருகே உள்ள பள்ளிகொண்டா செக் போஸ்ட்டை கடந்து தர்மபுரி நோக்கி சென்றபோது, முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டு வலதுபுறம் திரும்ப பின்னால் வந்த மு.க.ஸ்டாலின் அமர்ந்திருந்த கார் அதன் மேல் மோதாமலிருக்க சட்டென்று இடது புறம் திரும்பியுள்ளது.

ஆனால் வேகமாக கார், அந்த காரின் பின்புறம் மோதியது. எதிர்பாராத மோதலால் நிலைகுலைந்த மற்ற கார்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதின. இதில் மு.க.ஸ்டாலினின் பென்ஸ் காரின் வலது பக்க பம்பர் சேதமடைந்தது. ஆனால் அதிர்ஸ்ட்வசமாக காரில் சென்ற ஸ்டாலினுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்தை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் காரில் சென்றவர்கள் என பெரும் கூட்டம் திரண்டது.

கடந்த மாதம் ஸ்டாலின் வாங்கிய புது கார் விமான நிலையம் செல்லும் வழியில் கத்திபாரா அருகே டயர் வெடித்து சாலையில் நின்றது. பின்னர் ஸ்டாலின் அங்கிருந்த தொண்டரணி அமைப்பாளரின் காரில் விமான நிலையம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.