அதிமுக அரசை காப்பாற்ற தினகரன் ஆதரவு மூன்று எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்ய ஆளுந்தரப்பு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு மத்தியில் அவர்களை தங்கள் பக்கம் வளைப்பதற்கான வேலைகளையும் அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போது தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் பலம் 212. இதில் ஆட்சியமைக்க தேவையான உறுப்பினர்கள் 107 இருந்தால் போதுமானது. தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர், மதில் மேல் பூனையாக இருக்கும் கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோரை கணக்கில் சேர்க்காவிட்டால் அதிமுகவுக்கு 109 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தற்போதைய சட்டப்பேரவை பலத்தின் அடிப்படையில் அதிமுக அரசுக்கு மெஜாரிட்டில் இருப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஓடுகிறது.


ஆனால், மே 23க்கு பிறகு சட்டப்பேரவையில் 118 உறுப்பினர்களை வைத்திருக்கும் கட்சியே ஆட்சியைத் தொடர முடியும். இந்த எண்ணிக்கையைப் பிடிக்க இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அதிமுக வெல்ல வேண்டும். அதேவேளையில் தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் மூன்று எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தால், அதிமுக 7 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதுமானது. இதனை கருத்தில்கொண்டே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேரை தகுதி நீக்கம் செய்ய ஆளுந்தரப்பு முயற்சித்துவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.
இதற்கிடையே கட்சித்  தாவல் தடை சட்டத்தின்படி ஏன் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இவர்கள் மூவரும் நேற்று அந்த நோட்டீஸை பெற்றுகொண்டுவிட்டனர். நோட்டீஸ் பெற்றதிலிருந்து ஒரு வாரத்துக்குள் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும்.
மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பினாலும், அவர்களை மீண்டும் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் வேலைகளையும் அதிமுக மேலிடம் செய்துவருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2017-ல் 19 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்து எடப்பாடி அரசுக்கு எதிராக மனு அளித்த பிறகு அவர்கள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீஸ் பெற்ற சில நாட்களில் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் மீண்டும் அதிமுகவுக்குத் திரும்பினார்.  இதனால், அவருடைய எம்.எல்.ஏ. பதவி தப்பியது.


அதே பாணியில் தற்போது மூன்று எம்.எல்.ஏ.க்களையும் வளைக்கும் முயற்சியில் ஆளும்கட்சி ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் எல்லோரும் 4 தொகுதி பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், முக்கியமான அமைச்சரிடம் இதற்கான அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருப்பதாக ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த அமைச்சர் தரப்பிலிருந்து கள்ளக்குறிச்சி பிரபுவை அணுகியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எம்.எல்.ஏ. பிரபு இதற்கு ஒத்துப்போனால், அவர் மூலமாக மற்ற இரு எம்.எல்.ஏ.க்களையும் தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்துவருவதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.
ஆளும் கட்சியின் இந்த நகர்வுகளில் முன்னேற்றம் ஏற்பட்டால், அடுத்த சில நாட்களில் இந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு வேளை முயற்சி பலிக்காவிட்டால், ஏற்கனவே திட்டமிட்டப்படி மூவர் பதவியும் பறிக்கப்படும் என்றும் ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.