குஜராத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 3 எம்.எல்.ஏ.க்கள், திடீரென  பாஜகவில் இணைந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் குஜராத் காங்கிரசில் இருந்து சித்பூர் தொகுதி எம்.எல்.ஏ பல்வந்த் சிங் மற்றும் விரம்கம் தொகுதி எம்.எல்.ஏ. தேஜாஸ்ரீ படேல் ஆகியோர் காங்கிரசில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் விஜப்பூர் தொகுதி எம்.எல்.ஏவான பி.ஐ.படேலும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து  அவர்கள் மூன்று பேரும் இன்று  பா.ஜ.க. அலுவலகம் சென்று தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

ஏற்கனவே, குஜராத் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சங்கர்சிங் வகேலா காங்கிரசை விட்டு தமது ஆதரவாளர்களுடன் விலகியதை அடுத்து 3 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸில் இருந்து பிரிந்து பா.ஜ.க.வில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூன்று எம்.எல்.ஏ.க்கள் விலகியது கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 60 எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில், வகேலா உள்பட 4 பேர் பதவி விலகியதால் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 56 ஆக குறைந்துள்ளது.