இபிஎஸ்-ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அறந்தாங்கி ரத்தினம், விருத்தாசலம் கலைச் செல்வன் மற்றும் கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய எம்எல்ஏக்கள், பட்ஜெட் கூட்டத் தொடரைப் புறக்கணித்து மதுரை மேலூரில் டி.டி.வி.தினகரன் நடத்திய புதிய அமைப்பு அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம் மேலூரில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயரை அறிவிப்பேன் என்று டிடிவி தினகரன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி டிடிவி தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் மதுரை மேலூரில் இன்று காலை தொடங்கியது. அப்போது தொண்டர்கள் மத்தியில் டிடிவி தினகரன் தனது புதிய அமைப்பின் பெயரை அறிவித்தார்.

"அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என தனது அமைப்பின் பெயரை அறிவித்த தினகரன் தொடர்ந்து கொடியையும் அறிமுகப்படுத்தினார். அதில், கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியில் நடுவில் ஜெயலலிதா படம் இடம்பெற்றுள்ளது. 

இன்று நடைபெறும் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பார்கள் என முன்னாள் அமைச்சரும், தினகரன் ஆதரவாளருமான செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இபிஎஸ்-ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த அறந்தாங்கி ரத்தினம், விருத்தாசலம் கலைச் செல்வன் மற்றும் கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய எம்எல்ஏக்கள், பட்ஜெட் கூட்டத் தொடரைப் புறக்கணித்து மதுரை மேலூரில் டி.டி.வி.தினகரன் நடத்திய புதிய அமைப்பு அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கடந்த மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் முட்டுக்கட்டை போடுவதாக கூறி அதிமுகவில் இருந்து விலகி டி.டி.வி.தினகரன் அணியில் சேர்ந்த பிரபு இன்று மேலூர் கூட்டத்தில் பங்கேற்றார்.