செந்தில் பாலாஜியை விடாமல் சுத்துபோடும் வருமான வரித்துறை.. கரூரில் CRPF படையோடு களத்தில் இறங்கிய அதிகாரிகள்.!
மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீட்டில் கடந்த மே மாதம் 26ம் தேதி வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீட்டில் கடந்த மே மாதம் 26ம் தேதி வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது 8 நாட்கள் நீடித்தது. அப்போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, கடந்த 13ம் தேதி அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர். சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு காவேரி மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த மாதம் வருமானவரி சோதனையில் போது சக்தி மெஸ் வீடு மற்றும் ஓட்டல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. சுமார் 25 நாட்களுக்கு பிறகு திமுக ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த், சக்தி மெஸ், ஆடிட்டர் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் நேற்று மீண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும், பழனி முருகன் நகைக்கடைகளிலும் சோதனை நடைபெறுகிறது.
இந்த சோதனையானது 2வது நாளான இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் 10 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.