நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும் 15 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது என்றும் டி.டி.வி தினகரன் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அடுத்த  ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வர உள்ளது. தேர்தலுக்கு தயாராகும் வகையில் அனைத்து கட்சி தலைவர்களும் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தினகரனும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகத்தை கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டார். அது நாடாளுமன்ற தேர்தலை கூட்டணியுடன் எதிர்கொள்வது என்பது தான் தினகரனின் திட்டம். தற்போதைய சூழலில் வலுவான கூட்டணி இல்லை என்றால் தி.மு.க.வை எதிர்கொள்ள முடியாத என்று தினகரன் நம்புகிறார்.அந்த வகையில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு எதிரான கட்சிகளில் வலுவான கட்சிகளை மட்டும் சேர்த்துக் கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் களம் காணலாம் என்று தினகரன் வியூகம் வகுத்துள்ளார். தனது திட்டத்தை தனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் கூறி கருத்து கேட்டுள்ளார். பெரும்பாலானவர்கள் கூட்டணி அவசியம் என்றே கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 20 எம்.பி. இடங்களையாவது வெல்ல வேண்டும் என்கிற இலக்கை தினகரன் நிர்ணயித்துள்ளார்.

எனவே குறைந்தபட்சம் 25 தொகுதிகளிலாவது அ.ம.மு.க. போட்டியிட வேண்டும் என்று தினகரன் கணக்கு போடுகிறார். கூட்டணி கட்சிகளுக்கு சற்று தாராளமாக 15 தொகுதிகள் வரை ஒதுக்கலாம். மிகவும் அவசியம் என்றால் மேலும் ஒன்று இரண்டு தொகுதிகளை கூட விட்டுக் கொடுத்துவிடலாம், ஆனால் கணிசமான எம்.பி.க்களை வென்றால் மட்டுமே அ.ம.மு.க.வுக்கு எதிர்காலம் என்று தினகரன் நம்புகிறார். அந்த வகையில் அ.ம.மு.க. போட்டியிட்டால் வெற்றி என்று உறுதியாக தெரியும் 25 தொகுதிகளை தற்போதே கணக்கு எடுக்க ஆரம்பித்துவிட்டார் தினகரன். தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் இருக்கும் தினகரன் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளிடமும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தே விவாதித்து வருகிறார். மேலும் தற்போதே பூத் கமிட்டிக்களை அமைக்கும் பணிகளையும் விரிவுபடுத்துமாறு தினகரன் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் வேட்பாளர்களை அடையாளம் காணும் பணிகளையும் விரைவில் தினகரன் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.