சென்னை ஆர்.ஏ புரத்தில் வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்ப்பு தெரிவித்து தீக்குளைத்த முதியவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஆர்.ஏ புரத்தில் வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்ப்பு தெரிவித்து தீக்குளைத்த முதியவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னையின் கிரீன்வேஸ் சாலை அருகில் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 60 ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். மக்களுக்குக் குடிநீர், மின்சாரம், கழிவுநீர் கால்வாய் இணைப்பு மற்றும் ரேசன் கார்டு, ஆதார் உள்ளிட்ட அனைத்தையும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வழங்கியுள்ளன. அப்பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் பாதியை ஆக்கிரமித்துப் பறக்கும் ரயில் நிலையம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆனால் கால்வாயின் அருகிலிருந்த சுமார் 366 குடியிருப்புகள் கடந்த 2015 ஆம் ஆண்டு அகற்றப்பட்டது. அப்போது அதன் எதிரில் 50 அடி தூரத்திலிருந்த இளங்கோ தெருவில் உள்ள கல் வீடுகள் கால்வாயிலிருந்து தூரத்தில் இருந்ததால் அந்த பகுதிகள் அகற்றப்படாது என்று அம்மக்களுக்கு வாக்குறுதியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு என்ற பெயரல் அங்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது உழைப்பின் மூலம் சிறுகச் சிறுக சேமித்துக் கட்டிய சுமார் 259 வீடுகளை இடிக்க ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டும், பொதுமக்கள் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி தடுத்தும் மின் இணைப்பைத் துண்டித்தும் அம்மக்களை மிரட்டி அடித்தனர். இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் அங்கு போராடிக் கொண்டிருந்த மக்களை அதிரடியாக கலைத்துவிட்டுக் கடந்த ஒரு வாரமாக ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு வீடுகளை இடித்தும் சென்னையிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள படப்பை நாவலூருக்கு அவர்களைக் கட்டாயப்படுத்திக் குடியமர்த்தியும் வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் கண்னையன் என்ற முதியவர் காப்பாத்து, இந்த ஊமை ஜனங்களைக் காப்பாத்து என்று கூறி தீக்குளித்தார்.
இந்த நிலையில் வீடுகளை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த முதியவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், சென்னை இராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த வீடுகள் வருவாய்த்துறையினரால் இடிக்கப்படுவதைக் கண்டித்து கண்ணையா என்ற ஏழைப் பாட்டாளி தீக்குளித்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. கோவிந்தசாமி நகரில் உள்ள மக்கள் பல பத்தாண்டுகளாக அங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சென்னையின் பூர்வகுடிகள். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அவர்களின் வீடுகளை இடித்து சென்னையை விட்டு வெளியேற்றுவது மனித உரிமை மீறல். அதை அனுமதிக்க முடியாது. கோவிந்தசாமி நகரில் வீடுகள் இடிக்கப்படுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். தீக்குளித்த கண்ணையாவுக்கு உலகத்தர மருத்துவம் அளித்து அவரை காப்பாற்ற வேண்டும். படுகாயமடைந்த அவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
