பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 20 கைதிகள் உள்ளிட்ட 26 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் அதே சிறையில் இருக்கும் சசிகலா பீதி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. மறுபுறம் உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசியல் வாதிகள் தொற்றுக்கு ஆளாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா சிறை கைதிகளையும் விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் 40 ஏக்கர் பரபரப்பளவில் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு 2,000க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கின்றனர். ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் சிறை வளாகம் உள்ளது. இந்த சிறைக்கு புதியதாக வந்த கைதிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, 150 பேரின் ரத்த மாதிரிகள் மற்றும் திரவ மாதிரி, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில், சிறையின் 6 ஊழியர்கள் மற்றும் 20 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தகவல்படி, ஆண் கைதிகளுக்கு மட்டுமே தொற்று தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண் கைதிகளின் சிறைக்குப் பக்கத்தில் தான், சசிகலா உட்பட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், சசிகலா உட்பட அனைவருமே பீதியடைந்துள்ளனர்.புதிதாக வரும் கைதிகளை, 21 நாட்கள் தனிமையில் வைத்து, எந்த அறிகுறியும் இல்லை என்றால் மட்டுமே சிறையில் அடைக்க சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.