தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு , 21 சட்டப்பேரவை தொகுதிகளில்  இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக இந்த தேர்தலில்  வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அதற்காக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனா.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்பதில் டி.டி.வி.தினகரன் உறுதியாக உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலைவிட தினகரனுக்கு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அமமுக புது வியூகம் வகுத்துள்ளது. அதிமுகவை முந்திக்கொண்டு, தொகுதிகளில் களத்தில் இறங்கிய கட்சியினருக்கு அமமுக மேலிடம் `கவனிப்பில்' ஈடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் 21 சட்ட பேரவைத் தொகுதிகளில் ஒரு சில  தொகுதிகளைக் கைப்பற்றி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்த தினகரன் அதிரடியாக களம் இறங்கியுள்ளார்.

அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருவதாக வெளிப்படையாக தெரிந்தாலும் உட்கட்சிப் பூசலில் அக்கட்சி சிக்கித் தவிக்கிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தினகரன் அதிரடி வீயூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் கடந்த மாதம் நடந்த மக்கள் சந்திப்பு பயணத்தின்போது வந்த டிடிவி. தினகரன், கட்சி நிர்வாகிகளை நன்கு `கவனித்து' உற்சாகப்படுத்தியுள்ளார். இந்த உற்சாகம் அமமுகவினரை சுறுசுறுப்புடனும், விறுவிறுப்புடனும் தேர்தல் களம் காணத் தயார்படுத்தியுள்ளது.

இடைத் தேர்தலில் அதிமுக குறைந்தது 6 தொகுதிகளாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆட்சியைத் தக்க வைக்க மக்களவைத் தேர்தலைவிட, இடைத் தேர்தலுக்கே அதிமுக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றைக்கூட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவில்லை. தொகுதிகளைக் கேட்காமல் இருக்க மக்களவைத் தொகுதிகளை தாராளமாக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது. இதனால் டி.டி.வி.தினகரன் மக்களவை தேர்தலைவிட இடைத்தேர்தலுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

ஆளும் கட்சியினர் மீதான அதிருப்தி, திமுகவில் ஸ்டாலின் தலைமையை ஏற்காதது போன்ற காரணங்களால் குறிப்பிட்ட தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம். இதன் மூலம் ஆட்சி தானாக கவிழ்ந்து விடும் என்று என்று அசால்ட்டாக சொல்லுகிறார் தினகரன்.