தமிழகத்தில் நடைபெறவுள்ள 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையில் ஒப்படைப்போம் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். 

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், அதிமுக கட்சி விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், பொதுக்குழுவில் பேசிய அமைச்சர் தங்கமணி அதிமுக அரசு ஒரு நாள், 2 நாள் இருக்குமா என நாள் குறித்தவர்களுக்கு எல்லாம் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றி பதில் சொல்லிவிட்டது. அதிசயத்தில் வந்துவிட்டார் என முதல்வர் குறித்து சொல்கிறார்கள். 

ஆனால் தொண்டர்களோடு தொண்டர்களாக இருந்து உழைப்பால் உயர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. எதிரி ஒரு பக்கம், துரோகி மறு பக்கம் என அனைத்தையும் முறியடித்து வந்தவர் எடப்பாடி பழனிசாமி. வரும் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிசயம் நடக்கும். அப்போதும் அதிமுக ஆட்சியே தொடரும். 2021-ல் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி கையில் ஒப்படைப்போம். 

இவரது பேச்சு அதிமுகவில் யார் 2021-ல் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் என்பதற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. அதிமுகவில் இரு தலைமைகள் இருப்பதால் சிக்கல் ஏற்படும் என்று கட்சிக்குள்ளேயே பலரும் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் ஆதரித்தும் பேசி கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் அமைச்சர் தங்கமணியின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.