2019 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிடும் என பொதுச்செயலாளர் விஜயகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இப்போதே பல்வேறு கட்சிகள் தங்களது பணியைத் தொடங்கியுள்ளன.

 

தமிழகத்தை பொறுத்தவரை டிடிவி.தினகரன் பொறுப்பாளர்களை நியமித்து அதிரடி காட்ட தொடங்கியுள்ளார். அதேபோல் நேற்று நடைபெற்ற அதிமுக செயற்குழுவிலும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தே விவாதிக்கப்பட்டது. தேர்தல் வரும் போது கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2019-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். மேலும் அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்து பேசி வரும் நிலையில் விஜயகாந்த் இந்த அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.