கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி , அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். அதற்கு பதிலாக, 2000 ரூபாய் நோட்டுக்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொது மக்கள் அடைந்த துன்பத்துக்கு அளவே கிடையாது. அவர்கள் தங்களிடம் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக வங்கிகள் முன்பு மணிக்கணக்கில் நின்றனர். இந்த நடவடிக்கையால் வங்கியின் முன்பு வரிசையில் நின்ற நூற்றக்கும் மேற்பட்டோர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். பெண்கள் மற்றும் முதியவர்கள் மோடியைத் திட்டித் தீர்த்தனர்.

இந்நிலையில் பண மதிப்பிழப்பால் கடும் பணத்தட்டுப்பாடு நிலவியபோது உடனடியாக மத்திய அரசு  2000 ரூபாய் நோட்டுக்களை அதிக அளவில் புழக்கத்தில் விட்டது. 

2018-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த மொத்த பண மதிப்பு 18.03 லட்சம் கோடியாக இருந்தது. அதில் 6.73 லட்சம் கோடி ரூபாய், அதாவது 37 சதவீதம், 2000 ரூபாய் நோட்டுக்களாகும். 7.73 லட்சம் கோடி அதாவது 43 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்களாகும். மற்றவை அதைவிட குறைந்த மதிப்புள்ள நோட்டுக்கள்.

இதனிடையே 2000 ரூபாய் நோட்டுக்கள் பதுக்கப்படுவதாகவும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல குற்றகாரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்வது, பண பதுக்கலுக்கும், கருப்பு பண வர்த்தகத்துக்கும் மேலும் உதவி செய்யும் என்று பொருளாதார வல்லுநர்களும், எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்தன. 

இந்த நிலையில்தான், 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவதை  நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக, 'தி பிரின்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளின் வரத்தை குறைப்பதால் ரூ.500 நோட்டை அச்சிடுவதை அதிகப்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2000 ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரூ.2000 நோட்டு செல்லாமல் போகும் என்ற நிலை ஏற்படாது என்றும், ரூ.2000 வைத்திருப்பவர்கள் பதட்டமடைய தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் பொது மக்கள் மத்தியில் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுவிடுமோ என தங்கள் அச்சத்தைத் தெரிவித்துள்ளனர்.