ரூ.2000 வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தேர்தல் காரணமாக ரூ.2000 வழங்கும் கணகெடுப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏழைகளுக்கு அரசு ரூ.2000 வழங்கும் திட்டத்தை எதிர்த்து கருணாநிதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது கணக்கெடுப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடைமுறை விதிகளால் தற்போது 2000 ரூபாயை வழங்கும் திட்டம் இல்லை எனவும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110 வது விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான 24ம் தேதி, இத்திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டது.

இம்மாத இறுதிக்குள் தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என முதல்வர் அறிவித்திருந்த நிலையில், தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் உடனடியாகப் பணம் செலுத்தப்படுவதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தத் திட்டத்திற்காக பெரும்பாலனவர்களிடம் விண்ணப்பபடிவம் பெறப்பட்டு தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. சில நாட்களில் தங்களது வங்கிக் கணக்கில் பணம் வந்து சேரும் என எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் இப்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.