20 MP seats win I will quit politics ttv Dihnakaran Sasikal

நாடாளுமன்ற தேர்தலில் 20 எம்.பி இடங்களை கைப்பற்றவில்லை என்றால் அரசியலில் இருந்தே ஒதுங்கிவிடுவதாக பெங்களூர் சிறையில் டி.டி.வி தினகரன் தனது சித்தி சசிகலாவிடம் சபதம் செய்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பெங்களூர் சென்ற தினகரன் அங்கு சசிகலாவை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே பேசியுள்ளார். அதிலும் டி.டி.வி தினகரனின் அண்மைக்கால செயல்பாடுகளால் சசிகலா அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அ.ம.மு.க என்ற பெயரில் தினகரன் கட்சி நடத்தி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார் என்கிற ஒரு பெரிய குற்றச்சாட்டு உள்ளது.மேலும் தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என்று தினகரன் தன்னிச்சையாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் உள்ளன. சசிகலாவை பொதுச் செயலாளர் என்று வார்த்தைக்கு வார்த்தை கூறும் தினகரன் நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களில் அ.ம.மு.க போட்டியிடும் என்று தன்னிச்சையாக அறிவித்தது எப்படி என்று சீனியர்கள் சிலரே கேள்வி எழுப்பினர். மேலும் சசிகலாவுடன் கலந்து ஆலோசிக்காமல் ஸ்ரீரங்கம் வேட்பாளரை தினகரன் எப்படி அறிவித்தார் என்றும் கேள்விகள் எழுந்தன. சசிகலாவை சிறையில் வைத்துவிட்டு தினகரன் தனிக்காட்டு ராஜாவாக செயல்படுகிறார், கூடும் கூட்டத்தை வைத்து தன்னை ஒரு மாபெரும் தலைவராக தினகரன் நினைத்துக் கொண்டார் என் றெல்லாம் தினகரனை பிடிக்காத சிலர் சசிகலாவிடம் ஏற்கனவே போட்டுக் கொடுத்துள்ளனர். இதனை எல்லாம் மனதில் வைத்திருந்த சசிகலா வேண்டா வெறுப்பாகத்தான் தினகரனை சந்திக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. சுமார் 20 நிமிடங்கள் சந்திப்பின் போது தினகரனே அதிகம் பேசியுள்ளார். சசிகலா எந்த துணிச்சலில் 25 இடங்களில் போட்டி, கூட்டணி கட்சிகளுக்கு 15 இடங்கள் என்றெல்லாம் அறிவிக்கிறாய்? நம்முடன் கூட்டணிக்கு வர யார் தயாராக உள்ளனர்? என்று சசிகலா கேட்டுள்ளார். அதற்கு 25 தொகுதிகளில் போட்டியிட்டு 20தொகுதிகளில் வெற்றி பெற்று உங்கள் காலடியில் சமர்பிக்கிறேன். இல்லை என்றால் அரசியலில் இருந்தே ஒதுங்கிக் கொள்கிறேன் என்று சசிகலாவிடம் தினகரன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் அ.தி.மு.க – தி.மு.கவோடு சேர விரும்பாத கட்சிகள் நிச்சயம் நம்முடன் கூட்டணிக்கு வருவார்கள் அதற்கு சில காலம் ஆகும் என்று மட்டும் தினகரன் கூறியுள்ளார். இதனை எல்லாம் கேட்டுக் கொண்ட சசிகலா, அனைவரையும் அரவணைத்து செல் என்று மட்டும் கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் சற்று உற்சாகமாகவே காணப்பட்டார். விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் அவர் கூறினார்.