தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ள நிலையில், தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் ஜெயித்தார்.

தமிழகத்தில் பாஜக படுதோல்வி அடைந்தாலும், நாடு முழுவதும் அக்கட்சி 303 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. நாளை மோடி பிரதமராக 2 ஆவது முறையாக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் யார் ? யார்? இடம் பெற வேண்டும் என்பது குறித்து மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே பாஜக சார்பில் மத்திய அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங், நிர்மலா சீத்தாராமன், நிதின் கட்கரி , பியூஸ் கோயல் உள்ளிட்டோர் மீண்டும் அமைச்சராகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் பாஜக தலைவர் அமித்ஷா உள்துறை அமைச்சராகலாம் என கூறப்படுகிறது. இதே போல் பாஜகவின் கூட்டணி கட்சிகளுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்படவுள்ளன.


இந்நிலையில் கூட்டணி தர்மப்படி அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுளளது. மக்களவைத் தேர்தலில் ஜெயித்த ஒரே எம்.பி.யான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்  மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வைத்திலிங்கம் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.