ஊழல் வழக்கில் சிறை செல்வது உறுதி என்பது தெரிந்ததால் அமைச்சர்கள் 2 பேர் சிறையில் தங்குவதற்கு தற்போதே ஒத்திகை பார்க்கத் தொடங்கிவிட்டதாக டி.டி.வி ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

   அண்மையில் நடந்து முடிந்த கிறிஸ்டி நிறுவனத்திற்கு எதிரான வருமான வரித்துறை சோதனையை மையமாக வைத்து டி.டி.வி தினகரன் அணியினர் அமைச்சர்கள் இருவருக்கு எதிராக காய் நகர்த்தி வருகின்றனர். முட்டை கொள்முதலில் ஊழல் என்பதை கண்டுபிடித்தே வருமான வரித்துறை கிறிஸ்டி நிறுவனத்தில் சோதனை நடத்தியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் கிறிஸ்டி நிறுவனம் மூலமாக ரேசன் கடைகளுக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்வதிலும் பெரும் ஊழல் நடைபெறுவதாக ஒரு புகார் உள்ளது.

   துவரம் பருப்பு ஊழலை தெரியப்படுத்தி அமைச்சர்கள் 2 பேருக்கு சிக்கலை ஏற்படுத்த தினகரன் அணியினர் சென்னையில் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் தினகரனின் வலது கரமாக விளங்கும் பெங்களூர் புகழேந்தி ஆதாரங்களுடன் சில முறைகேடுகளை புட்டு புட்டு வைத்தார். அதிலும் விலை மிகவும் மலிவான துவரம் பருப்பை அதிக விலைக்கு கிறிஸ்டி நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு கொள்முதல் செய்ததற்கான ஆதாரத்தை புகழேந்தி பட்டியலிட்டார்.

   மேலும் கிறிஸ்டி நிறுவனம் வழங்குவதை விட குறைந்த விலைக்கு துவரம் பருப்பை விநியோகம் செய்ய பல்வேறு நிறுவனங்கள் முன்வந்ததற்கான ஆதாரங்களை வெளியிட்ட புகழேந்தி கிறிஸ்டி நிறுவனத்திற்கு தொடர்ந்து டென்டர்கள் வழங்கப்பட்டதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று கூறி சில ஆவணங்களையும் புகழேந்தி வெளியிட்டார். இதன் மூலம் துவரம் பருப்பு கொள்முதலில் மட்டும் மாதம் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெறுவதாக புகழேந்தி தெரிவித்தார்.

   மேலும் முட்டை கொள்முதலை தொடர்ந்து துவரும் பருப்பு ஊழல் அம்பலமாகியுள்ளதால் விரைவில் மீண்டும் ஒரு வருமானவரித்துறை சோதனையோ அல்லது சி.பி.ஐ சோதனையோ தமிழ்நாட்டில் நடைபெறும் என்று கூறிய புகழேந்தி, அந்த சோதனைகள் இரண்டு அமைச்சர்களை குறி வைத்து நடைபெறும் என்றும் தெரிவித்தார். இந்த தகவல்களை எல்லாம் தெரிந்து கொண்ட அந்த அமைச்சர்கள் இருவரும் தற்போது வீட்டில் மின்விசிறியோ, ஏசியோ போடாமல் தூங்கிப் பழகுவதாக புகழேந்தி குறிப்பிட்டார்.

   அதாவது சிறைக்கு செல்ல வேண்டும் என்பது தெரிந்து சிறையில் பேன், ஏ.சி இருக்காது என்பதால் அதற்கு ஏற்ப அமைச்சர்கள் இருவரும் தயாராகி வருவதாக புகழேந்தி கூறினார்.