சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பலரும் ஆதரவும், இந்து அமைப்புகள் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 

இதையடுத்து நேற்று முன்தினம்  சபரிமலையில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமானாது. கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து போராட்டக்காரர்கள் காலில் விழுந்து முறையிட்டு திருப்பி அனுப்பினர். மேலும், பெண் காவலர்கள் அங்கு பணியாற்றவும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த வித முடிவும் எடுக்கலாம் என தேவசம் போர்டுக்கு கேரள அரசு முழு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் போராட்டக் காரர்களின் எதிர்ப்பையும் மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்துக்கு 2 பெண்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

ஆந்திராவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர்  கவிதா மற்றும் கருப்பு ஆடையுடன் இருமுடி சுமந்து கொண்டு எர்ணாகுளத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் என 2 பேர் சபரிமலை சென்று கொண்டிருக்கின்றனர். அந்த பெண்கள் ஹெல்மெட் அணிந்து சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களைச் சுற்றி நூற்றுக் கணக்கான போலீசார் அரணாக நின்று பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர்.