2 நாளில் 2 திமுக எம்.எல்.ஏ.க்கள் மரணத்தால் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்கவிருந்த எம்.பி.க்கள் கூட்டம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை பிப்ரவரி 29-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், தொகுதி சார்ந்த பிரச்சனைகளில் திமுக எம்.பி.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதனிடையே, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்த நிலையில், இன்று மற்றொரு திமுக எம்எல்ஏவான காத்தவராயன் உடல்நலக்குறைவினால் உயிரிழந்தார். மேலும், பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால் திமுகவினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நாளை நடைபெற இருந்த திமுக எம்.பி.க்கள் கூட்டம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.