திமுக கூட்டணியில் தலா மூன்று தொகுதிகளைக் கேட்க இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.

தொகுதி பங்கீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த திமுக கூட்டணியில் குழு அமைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சில தினங்களில் குழுக்களை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி முதல் தொகுதி உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தையத் தொடங்க திமுக திட்டமிட்டுள்ளது. திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட முடிவு செய்துவிட்ட இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், இதுதொடர்பாக உயர் மட்டக் கூட்டத்தையும் நடத்தியுள்ளன. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  மாநில செயலாளர் முத்தரசன்  தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. கடைசியாக 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டன.

தற்போது இரண்டு கம்யூனிஸ்டுகளும் திமுக கூட்டணியில் தலா 3 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக அக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள். திமுகவிடம் தலா 3 தொகுதிகளைக் கேட்கவும் அக்கட்சிகள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. 5 தொகுதிகளின் பட்டியலை கொடுத்து அதிலிருந்து 3 தொகுதிகளைக் கேட்க இரு கட்சிகளுமே திட்டமிட்டுள்ளன.

இதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை, திருப்பூர், தென்காசி, வடசென்னை, கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து தொகுதிகளைப் பட்டியலிட்டு வைத்திருக்கிறது. இதேபோல மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை, குமரி, சிதம்பரம், திண்டுக்கல் ஆகிய தொகுதிகளை பட்டியலிட்டு திமுகவிடம் கொடுக்க முடிவு செய்துள்ளது.