தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . இந்நிலையில் முதல்வர் நிவாரண நிதிக்காக நடிகர் நடிகைகள் விஐபிகள் பிரபலங்கள் என ஏராளமானோர் நிதி வழங்கி வரும் நிலையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் திருபுவனத்தை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு  பயிலும் பள்ளி மாணவி முதல்வர் நிவாரண நிதிக்கு உண்டியலில் சேமித்த பணத்தை நிவாரணமாக வழங்கியுள்ளார் , அதற்கு முதலமைச்சரும் அந்தச் சிறுமியை மனமுவந்து பாராட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  தமிழகத்தில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது ,  இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில்  ரேபிட் டெஸ்ட்டு கிட்டுகள் மூலம் பரிசோதனையை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது .  ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது .  இந்நிலையில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள  பொருளாதார இழப்பை ஈடு செய்யும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்கலாம் என தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்தார் .  அதனைத்தொடர்ந்து பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தொழிலதிபர்கள் பிரபலங்கள் நிதியுதவி வழங்கிவருகின்றனர்.   நிதி உதவி வழங்குபவர்களுக்கு   தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் நன்றி தெரிவித்து வருகிறார் . 

இந்நிலையில் நேற்று ஏப்ரல் 21  ரமேஷ் குமார் என்பவர் ஹேமா ஜெயஸ்ரீ என்ற ஒன்றாம் வகுப்பு மாணவி தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தை முதல்வரின்  ட்விட்டர் கணக்கை டேக் செய்து வெளியிட்டார் ,  இந்த கடிதத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஜெயஸ்ரீ  எழுதியிருந்ததாவது :-  தமிழ்நாடு முதலமைச்சர் அய்யாவுக்கு வணக்கம் என் பெயர் ஹேமா ஜெயஸ்ரீ தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் திருப்புவனம் பேரூராட்சி பகுதியை சேர்ந்தவள்,  தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கின்றேன் , கொரோனா வைரஸ் நோய்தொற்றில் இருந்து மக்களைக் காக்க எனது உண்டியலில் சேமித்து வைத்த 543 ரூபாய்  பணத்தை எனது அப்பாவின் வங்கிக் கணக்கில் இருந்த முதலமைச்சர் ஐயாவுக்கு அனுப்புகின்றேன் நன்றி என ஹேமா ஜெயஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.

உடனே இதைக் கண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பதிவில் இந்த சிறுவயதிலேயே பிறருக்கு உதவும்  உயர்ந்த பண்புடன் நம் குழந்தைகள் வளர்வது மகிழ்ச்சி அளிக்கிறது .  தான் சேமித்து வைத்த தொகையை வழங்கியுள்ள தஞ்சை திருவாரூர் திருப்புவனத்தைச் சேர்ந்த குழந்தை  ஜெயஸ்ரீக்கு  வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என்று குறிப்பிட்டுள்ளார் .  நிதி அனுப்பிய சிறுமிக்கு முதல்வர் நன்றி கூறி பாராட்டு இருப்பது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .