காலியாக உள்ள 19 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றம், ஓசூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்தலும், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் உறுப்பினர் மறைவாலும், ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.  நீதிமன்றத்தால் தண்டனை பெற்றதாலும் 21 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்தத் தொகுதிகளில் வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 21 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தாமல் இருக்க அதிமுக தரப்பு பாஜக மூலம் முயற்சி மேற்கொள்வதாக தவல்கள் வெளியாகின. 

இதனால், கொதித்துபோன திமுக, நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தது. ஒரு வேளை இடைத்தேர்தலை நடத்தாமல் போனால், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்தார். இந்நிலையில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 19 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

காலியாக உள்ள தொகுதிகளில் ஏப்ரல் மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்திருக்கிறது. அந்த உத்தரவாதத்தை ஏற்று இடைத்தேர்தல் நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது. நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின்படி இடைத்தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. ஆனால், 21 தொகுதிகளுக்கு மாறாக 19 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ள நிலையில், அந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இதேபோல ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணா நீதிமன்றத்தால் தண்டனைப் பெற்றதால், அவரது பதவி தானாகவே காலியாகிவிட்டது. ஆனால், ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு தமிழகச் சட்டப்பேரவை செயலகம் தகவல் எதையும் இன்னும் அனுப்பவில்லை. 

இந்தக் காரணத்தால் இந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதில் சிக்கல் உள்ளது. தற்போதைய நிலையில் இந்த இரு தொதிகளைத் தவிர்த்து 19 தொகுதிகளில் இடைத்தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தேர்தல் ஆணையம் நடத்தும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.