முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக சத்யநாராயணன் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து புதிய நீதிபதி சத்யநாராயணன் கடந்த மாதம் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கினார். 

அரசுத் தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் சபாநாயகர் தரப்பு வாதம் என அனைத்தும் நிறைவடைந்தததையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி சத்யநாராயணன் ஒத்திவைத்தார்.

 இந்த வழக்கில் அக்டோபர் முதல் வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியானது. பின்னர் 10 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது.

இப்படி தீர்ப்புத் தேதி தள்ளிக் கொண்டே போன நிலையில், தீர்ப்பு எழுதி முடித்துவிட்டதாகவும்,  தசரா விடுமுறைக்காக நீதிபதி சத்ய நாராயணன் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுவிட்டதால் தீர்ப்பு தாமதமாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.