சசிகலா கடந்த ஆண்டு பிப்வரி மாதம் சிறைக்கு சென்ற நிலையில் அவரை கட்சி ரீதியாக சந்தித்த நிர்வாகிகள்மிக மிக சொற்பம். தினகரன் மட்டுமே 15 நாட்களுக்கு ஒரு முறை தவறாமல் பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்து வருகிறார். இடையில் கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் சமயத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சசிகலாவை சிறையில் சந்தித்தார். அதன் பிறகு கால்நடைத்துறை அமைச்சராக இருந்த போது அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியும் சசிகலாவை சந்தித்ததாக சொல்லப்பட்டது.

இவர்கள் தவிர தினகரன் உடன் அழைத்துச் செல்பவர்கள் மட்டுமே சசிகலாவை இதுநாள் வரை சந்தித்து வந்தனர். தினகரனுக்குமிக நெருக்கமான வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன் போன்றோர் கூட இதுவரை பெங்களூர் சென்று சசிகலாவை சந்திக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கருணாஸ் சசிகலாவை சந்தித்து திரும்பியிருந்தார்.

இந்த நிலையில் தான் தகுதி நீக்க வழக்கில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் பதவி இழந்தனர். அவர்களுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லியும் யாரும் சமாதானம் ஆவது போல் தெரியவில்லை. மிகுந்த சிரமப்பட்டு அவர்களை சமாதானம் செய்து அனுப்பினால் மறுநாள் எதாவது ஒரு கவலையுடன் மீண்டும் அவர்கள் தினகரனை நச்சரிக்கின்றனர். இந்த நிலையில் தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடா? இடைத்தேர்தலா? என்பதிலும் தினகரனுக்கு குழப்பம் உள்ளது.

தங்கதமிழ்செல்வன் உள்ளிட்ட சில எம்.எல்.ஏக்களின் எமோசனல் பிளாக் மெயிலால் மேல்முறையீடு எனும் முடிவை கைவிட்டு விட்டதாகவும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் தினகரன் கூறி வருகிறார். மேலும் சசிகலாவும் மேல்முறையீடு எனும் ஆப்சனைத்தான் தேர்வு செய்துள்ளதாகவும் தினகரன் கூறி வருகிறார். ஆனால் அதனை நம்ப பல்வேறு தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் மறுத்து வருகிறார்கள்.

இதனால் தான் வேறு வழியே இல்லாமல் பதவி இழந்த எம்.எல்.ஏக்களை சசிகலாவை நேரில் சந்திக்க வைக்கலாம் என்கிற முடிவுக்கு தினகரன் வந்துள்ளார். இடைத்தேர்தல் என்று முடிவெடுத்துவிட்டாலும் கூட 20 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் தொகுதிக்கு 5 கோடி என்று மலிவான பட்ஜெட்டை போட்டாலும் கூட 100 கோடி தேவைப்படுகிறது.

இதனால் தான் சசிகலாவை வைத்து தகுதி நீக்க எம்.எல்.ஏக்களை மேல்முறையீட்டிற்கு ஒப்புக் கொள்ள வைக்க தினகரன் திட்டமிட்டுள்ளார். மேலும் தன்னுடன் பெங்களூருக்கு வந்துள்ள தகுதி நீக்க எம்.எல்.ஏக்களில் 5 பேரை சிறைக்கு அழைத்துச் சென்று சசிகலாவை சந்திக்க வைக்க தினகரன் முடிவு செய்துள்ளார். அப்போது சசிகலா தகுதி நீக்க வழக்கில் எடுக்கும் முடிவையே செயல்படுத்துவது என்றும் தினகரன் முடிவு செய்துள்ளார்.

எனவே சசிகலா தகுதி நீக்க எம்.எல்.ஏக்களிடம் என்ன சொல்லப் போகிறார் என்கிற திக் திக் மனநிலையில் தினகரன் இருப்பதாக சொல்லப்படுகிறது.