18 MLA Disqualification Case

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 3-வது நீதிபதி சத்யநாராயணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் இவ்வழக்கின் விசாரணை ஜூலை 23 முதல் 27-ம் தேதி வரை நாள்தோறும் விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து 2 நீதிபதிகள் மாறுப்பட்ட கருத்தை தெரிவித்தனர். 2 நீதிபதிகளின் தீர்ப்பு மாறுபட்டதால் யாருடைய தீர்ப்பு சரி என்பதை முடிவு செய்ய 3-வது நீதிபதியாக எம். சத்தியநாராயணனை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்நிலையில் தகுதி நீக்க வழக்கு 3-வது நீதிபதியான எம்.சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.