டி.டி.வி. தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 3 ஆவது நீதிபதியான சத்திய நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் கடந்த ஆண்டு தமிழக கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து அரசு தலைமை கொறடா கொடுத்த புகாரின் அடிப்படையில், வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து, சட்டசபை சபாநாயகர் ப.தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்  18 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை  விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர்  கடந்த மாதம் 14-ந்தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர்.

சபாநாயகர் உத்தரவு சரிதான், அவரது உத்தரவில் தலையிட முடியாது என்று தலைமை நீதிபதியும்  சபாநாயகர் உத்தரவு உள்நோக்கம் கொண்டது. சட்டவிரோதமானது. அதனால், அந்த உத்தரவை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி எம்.சுந்தர் உத்தரவிட்டனர்.

இதையடுத்து இருவரது தீர்ப்பில் எது சரியானது என்று முடிவு செய்ய 3-வது நீதிபதியாக எம்.சத்தியநாராயணனை நியமித்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, 18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விரைவாக விசாரணைக்கு பட்டியலிடும்படி, சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் ஆர்.சக்திவேலிடம், 18 எம்.எல்.ஏ.க்களின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கடிதம் கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.