தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பதில் அளித்துள்ளார். 

எடப்பாடிக்கு அரசுக்கு எதிராக செயல்பட்டதாக தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் எதாடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். 

இதனையடுத்து வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு சென்றது. இந்த வழக்கை விசாரித்த வந்த நீதிபதி சத்தியநாராயணன் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி செல்லும் அதிரயாக தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் திடீரென தினகரன் மேல்முறையீடு செல்லவில்லை என தெரிவித்தார். 

ஒரு வழியாக இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. அதனால் தேர்தல் அறிவிப்பு எப்போது வரும் என்று அரசியல் கட்சியினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக சட்டப்பேரவை அலுவலகம் அறிக்கை அனுப்பியது. 

இந்நிலையில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து தமிழக தேர்தல் அதிகாரியுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.