மகாராஷ்ட்ரா  மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த  நிலையில், கடந்த சனிக்கிழமை அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. 

பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ்  கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார் துணை துணை முதலமைச்சராகவும்  பதவி ஏற்று கொண்டனர். இதனால் தேசியவாத காங்கிரசில் பிளவு  ஏற்பட்டது.

இதையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  ‘ரிட்’ வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மீது, நாளை காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்  அறிவித்துள்ளது.

இதற்கிடையில்  தங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏக்கள்  கடிதத்தை கவர்னர்  மாளிகையில் 3 கட்சிகளின் மூத்த தலைவர்களும்  சமர்பித்துள்ளனர். சிவசேனா 63, காங்கிரஸ் 44, தேசியவாத காங்கிரஸ் 51 என மொத்தம் 162  எம்.எல்.ஏக்களின் கையெழுத்துடன் ஆதரவு கடிதம்  சமர்பிக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.

மேலும்  சமாஜ்வாதி கட்சியின் 2 எம்.எல்.ஏக்களும் சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து  கையெழுத்திட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்களுக்கு போதுமான பலம் இருப்பதை கவர்னரிடம் நிரூபிக்கும் வகையில் இன்று 162  எம்எல்ஏக்கள்  மும்பையில் உள்ள கிராண்ட் ஹையாட்டில் ஹோட்டலில் அணிவகுப்பு நடத்தினர்