தமிழகம் முழுவதும் உள்ள 1,500 தலைமையாசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து, அப்பகுதியில் விவசாயப் பாசனத்துக்கான தண்ணீர் திறக்கப்படும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்கள் செங்கோட்டையன்  கலந்துகொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செங்கோட்டையன், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கீழ் பவானி வாய்க்காலில் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமென்றும், இந்தாண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

“அத்திக்கடவு-அவினாசி திட்டம் பற்றிய ஆய்வுப் பணி நடந்து வருகிறது. விரைவில் இதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பாண்டியாறு, புன்னம் புழா திட்டம் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் வனப்பகுதி தாளவாடியில் பெய்யும் மழைத் தண்ணீர் எல்லாம் கர்நாடகத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. அதனைத் தடுத்து தாளவாடியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் தமிழகத்தில் மலர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது, இந்த அரசுக்குக் கிடைத்த பெரிய வெற்றி ஆகும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 1,500 தலைமையாசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தெரிவித்தார்.