அடுத்த 14 நாட்களுக்குள் கொரோனா சென்னையில் கட்டுக்குள் வந்து விட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மீண்டும் முழு ஊரடங்கு கிடையவே கிடையாது என்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்துள்ளார். ஏற்கனவே 40 நாட்களுக்கு மேல் முழு ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்கள் பட்ட கஷ்டத்தை மீண்டும் ஒரு முறை எதிர்கொள்ள முடியாது. எனவே முழு ஊரடங்கு என்று பேசவே வேண்டாம் என்று கண்டிப்பு காட்டி வந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் சென்னையில் இருந்து கொரோனா மெதுவாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என தாண்டி வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் அதிகமானதால் தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பேற்ற உடன் முதலமைச்சரை சந்தித்து பேசிய ராதாகிருஷ்ணன் கண்டிப்பாக மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். முழு ஊரடங்கு இல்லாமல் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் எடுத்துக் கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்காத எடப்பாடி பழனிசாமி வேறு வழிகளை யோசிக்குமாறு ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். ஆனால் சென்னையில் கொரோனாவை குறைக்கும் பணியில் இறங்கியுள்ள அமைச்சர்கள் 6 பேரும் ஒரே குரலில் சென்னையில் முழு ஊரடங்கு அவசியம் என்று கூறியுள்ளனர்.

இதன் பிறகே சென்னை காவல் மாவட்டத்தில் மற்றும் ஊரடங்கிற்கு அனுமதி கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதிலும் 14 நாட்களுக்குள் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவையும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எடப்பாடி பிறப்பித்துள்ளார். அதோடு மட்டும் அல்லாமல் சென்னை முழு ஊரடங்கை அமல்படுத்தும் பொறுப்பையும் அமைச்சர்கள் குழு மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் வசம் ஒப்படைத்துள்ளார். கடந்த முறை போல் முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் யாரும் இந்த ஊரடங்கு அமல் விஷயத்தில் தலையிடப்போவதில்லை என்கிறார்கள்.

அமைச்சர்கள் ஆறு பேர், தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் உருவாக்கிய திட்டப்படி தான் இன்று நள்ளிரவு முதல் சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக இந்த ஊரடங்கை எப்படி சிறப்பாக செயல்படுத்துவது என்பதில் தான் ராதாகிருஷ்ணன் தீவிரம் காட்டி வருகிறார். இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனை சில முறை நேரிலும் பல முறை தொலைபேசி மூலமும் பேசியுள்ளார்.

இதனை அடுத்து தயாரான திட்டப்படி கடந்த முறைகளை போல் இல்லாமல் இந்த முறை சென்னையில் ஊரடங்கு மிகவும் கடுமையாக இருக்கும் என்கிறார்கள். பொதுமக்கள் வீட்டை விட்டு தேவையில்லாமல் வெளியே வருவதற்கான வாய்ப்பே இல்லாமல் ஊரடங்கை அமல்படுத்த திட்டம் தீட்டியுள்ளனர். மேலும் முதலமைச்சரின் உத்தரவுப்படி 14 நாட்களுக்குள் சென்னையை கொரோனா மையம் என்கிற அவச் சொல்லியில் இருந்து காப்பாற்றியாக வேண்டும் என்று அதிகாரிகளும் களம் இறங்கியுள்ளனர்.