முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் தொகுதி நிலவரம் சிறப்பாகவே உள்ளது என்கிற ரீதியில் பேசி வரும் நிலையில் அவர்களுக்கு எடப்பாடி அளிக்கும் பதிலும் பாசிட்டிவ் ஆகவே உள்ளது.

மே 2ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரிய அளவில் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார். அமைச்சர்கள், முக்கிய கட்சி நிர்வாகிகளை மட்டுமே எடப்பாடி பழனிசாமி சந்தித்து வருகிறார். கட்சிக்கு அப்பாற்பட்ட முக்கிய பிரமுகர்கள் நேரம் கேட்டால், தேர்தல் முடிவுகள் வந்த பிறகு பார்க்கலாம் என்றே முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து பதில் வருகிறது. அதே சமயம் அமைச்சர்கள் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை முதலமைச்சரை நேரில் சென்று சந்தித்துள்ளனர்.

தன்னை சந்திக்கும் அமைச்சர்களிடம் எடப்பாடி பழனிசாமி தவறாமல் கேட்கும் கேள்வி, உங்கள் தொகுதி எப்படி உள்ளது? மாவட்டத்தில் மற்ற தொகுதிகளின் நிலை என்ன என்பது தான். இதில் கடைசி மூன்று நாட்களில் டிரெண்ட் மாறிவிட்டது என்றும், மிக எளிதாக தான் வெற்றி பெறுவது உறுதி என்றே அமைச்சர்கள் கூறுகின்றனர். மேலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி உறுதி என்கிற எண்ணத்தில் தேர்தல் பிரச்சாரத்தை கூட முன்கூட்டியே முடித்துக் கொண்டதாகவும் அதனால் நமது வேட்பாளர்கள் கடைசி நேரத்தில் தேர்தல் பணியில் சுறுசுறுப்பு காட்டியதாகவும் அமைச்சர்கள் பலரும் ஒரே மாதிரியான பதிலை கூறியுள்ளனர்.

இதனிடையே மத்திய உளவுத்துறை மற்றும் மாநில உளவுத்துறை சார்பில் தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்பை தொகுதிவாரியாக எடுத்துள்ளதாக சொல்கிறார்கள். இந்த அறிக்கைகளும் எடப்பாடி பழனிசாமியின் டேபிளுக்கு கடந்த வாரமே வந்துவிட்டதாக கூறுகிறார்கள். இதன் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூடுதல் நம்பிக்கையுடன் இருப்பதாக சொல்கிறார்கள். அதிலும் அந்த அறிக்கை வந்த பிறகு தன்னை சந்திக்க வரும் அமைச்சர்கள் அனைவரிடமும் அதிமுக 120 தொகுதிகளில் வெல்வது உறுதி என்று எடப்பாடி கூறி வருகிறாராம்.

எந்தெந்த தொகுதிகளில் அதிமுகவிற்கு வெற்றி பிரகாசமாக உள்ளது? எந்தெந்த தொகுதிகளில் குறைந்த மார்ஜினில் வெற்றி என்பது உள்ளிட்ட தகவல்களை கூட எடப்பாடி பழனிசாமி கூறுவது அமைச்சர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதனை அடுத்து மறுபடியும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆர்வத்துடன் சந்தித்து வருவதாக சொல்கிறார்கள். உளவுத்துறை அறிக்கைகளை பொறுத்தவரை மாநில உளவுத்துறை அறிக்கையானது அதிமுக மறுபடியும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வாய்ப்பு என்றே கூறுவதாகவும் ஆனால் மத்திய உளவுத்துறை அறிக்கை 100 இடங்களுக்கு மேல் அதிமுக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.