முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் சொத்து இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவிக்க திட்டமிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். பின்னர் அவரை தங்களது தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மறுநாள் அவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர். ப.சிதம்பரத்தை 5 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 26-ந் தேதி வரை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ப.சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட 5 நாள் காவல் இன்றுடன் முடிவடைவதால், சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை,  சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்த உள்ளனர். 

அப்போது, ப.சிதம்பரத்தின் காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு சி.பி.ஐ. தரப்பு கேட்டுக்கொண்டால் ப.சிதம்பரம் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்படும். காவலை நீட்டிக்க சி.பி.ஐ. தரப்பில் கோரிக்கை விடுக்கப்படாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ப.சிதம்பரத்தின் காவல் நீட்டிக்கப்படவில்லை என்றால், அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார். அவர் திகார் சிறைக்கு அனுப்பப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

டெல்லி திகார் சிறையிலுள்ள பொருளாதார குற்ற வளாகத்தின் முக்கிய அறை ஒன்று சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. பொருளாதார குற்றங்களில் கைது செய்யப்படும் வி.வி.ஐ.பிக்கள் இந்த வளாகத்தில்தான் அடைக்கப்படுவார்கள். அந்த வளாகத்திலுள்ள 7 ஆம் எண் கொண்ட அறையை கடந்த 2 நாட்களாக சுத்தம் செய்யும் பணிகளை சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  

இதேபோல் அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சற்று முன் தள்ளுபடி செய்து விட்டது. இந்த நிலையில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை சார்பில் புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த பிரமாண பத்திரத்தில் கிரீஸ், மலேசியா, பிரிட்டீஷ், வெர்ஜின் ஐலேண்டு, பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், ஆஸ்திரியா உள்பட 12 வெளிநாடுகளில் ப.சிதம்பரம் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.