கொரோனா ஊரடங்கால் மாதக்கணக்கில் பிரிந்திருந்த பள்ளிக்கூட காதல் ஜோடி ஒன்று வகுப்பறையில்  திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது. அதுமட்டுமின்றி இது மனித சமூகத்திற்கு பல்வேறு பாடங்களையும், படிப்பினைகளையும் கற்றுக் கொடுத்துள்ளது என்றால் மறுப்பதற்கில்லை. அத்துடன் கொரோனா காலக்கட்டத்தில் பலவிதமான சுவாரஸ்ய சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் கொரோனா ஊரடங்கு முடிந்து கடந்த சில வாரங்களாக ஆந்திர மாநிலத்தில் பள்ளிக்கூடங்கள் மீண்டும் இயங்கிவருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர். 

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரியில்  இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர், அந்த பள்ளிகூடத்தில் பயின்று வரும் மைனர் மாணவர் ஒருவர் தன்னுடன் படிக்கும் மைனர் மாணவியை காதலித்து வந்துள்ளார், இதற்கிடையில் கொரோனா ஊரடங்கால் பல மாதங்களாக காதல் ஜோடிகள் சந்திக்க முடியாமல் போனது. இந்நிலையில் மீண்டும் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த அம் மாணவர்கள் இனி எந்த வகையிலும் தாங்கள் பிரிந்து விடக் கூடாது என்பதற்காக  கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாங்கள் படிக்கும் வகுப்பறையிலேயே வைத்து மாணவன் தனது காதலியான அந்த மைனர் மாணவிக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். 

இதை உடன் இருந்த அவரது நண்பர்கள் வீடியோ எடுக்க, தற்போது அது சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி முதல்வர் அவ்விரு மாணவர்களையும் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த மாணவர்களையும் பள்ளிக்கூடத்திலிருந்து நீக்கியுள்ளார். திருமணம் செய்து கொண்ட இருவரும் மைனர்கள், அதாவது 18 வயது நிறைவடையாதவர்கள் என்பதால் இந்த திருமணம் சொல்லாது என கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து இரு வீட்டார் தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பள்ளிக்கு சென்று பாடம் படிக்க வேண்டிய வயதில் வயசுக்கோளாறு காரணமாக ஈடுபடும் இதுபோன்ற விபரீத செயல்களால் மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு எதிர்காலத்தை வீண்டித்துக்கொள்ளும்  சம்பவர்கள் தொடர்கிறது வேதனைக்குரியது.