ஹிந்திப்படவுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மனைவுயும், நடிகையும், சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.யுமான ஜெயா பச்சன் தனக்கு 1000  கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

நடிகை ஜெயா பச்சன் சமாஜ்வாதிக்கட்சியில் நீண்டகாலமாக இருந்து வருகிறார். தற்போது எம்.பி.யாக இருக்கும் ஜெயாபச்சன் மீண்டும், மாநிலங்கள் அவைத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

இதையடுத்து  அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள  பிரமாணப் பத்திரத்தில் தனக்கு 1000  கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் சமாஜ்வாதிக் கட்சியின் சார்பில் போட்டியிடும் போது தனக்கு 412 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். தற்போது  ஜெயாபச்சனின் சொத்து கடந்த 5 ஆண்டுகளில் 550 கோடி ரூபாய்க்கும் அமல் அதிகரித்துள்ளது.

ஜெயாபச்சன் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில், தனக்கும், தன்னுடைய கணவர் அமிதாப்பச்சனுக்கும் ஏறக்குறைய 463  கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும், நகை, பணம், கார் உள்ளிட்டவை 540 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், அசையா சொத்துக்கள் 152 கோடி ரூபாய்க்கும் , பணம் நகை, கார் உள்ளிட்ட சொத்துக்கள் 343 கோடி ரூபாய்க்கும் உள்ளதாக தெரிவித்து இருந்தார்.

இதில் ஜெயாபச்சனிடம் இருக்கும் தங்க நகைகள் மதிப்பு மட்டும் ரூ. 62 கோடியாகும், அமிதாப்பின் நகைகள் மதிப்பு ரூ.36 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிதாப், ஜெயாபச்சனிடம் மொத்தம் 12 விலை உயர்ந்த கார்கள் உள்ளன. இதில் ரோல்ஸ் ராய்ஸ், 3மெர்சடீஸ் பென்ஸ் கார்கள், போர்சே, ரேஞ்ச் ரோவர் ஆகிய கார்கள் உள்ளன. மேலும், அமிதாப் சொந்தமாக டாடா நானோ கார், டிராக்டரும் வைத்துள்ளார்.

ஜெயாபச்சனும், சொந்தமாக ரூ.3.4 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்களும், அமிதாப்புக்கு ரூ.51 லட்சத்திலும் உள்ளன. ஜெயாபச்சனிடம் இருக்கும் பேனா மதிப்பு ரூ.9 லட்சமாகும்.

மேலும், பிரான்ஸ் நாட்டில் பிரிங்நோகன் பிளேஜ் பகுதியில் 3,175 சதுரமீட்டர் பரப்பில் ஒரு பங்களாவும், டெல்லிநொய்டா, போபால், புனே, அகமதாபாத், குஜராத் காந்திநகர்ஆகிய இடங்களில் சொகுசுவீடுகளும், சொத்துக்களும் உள்ளன.

ஜெயாபச்சனிடம் லக்னோ அருகே கக்கோரி பகுதியில் ரூ.2.2 கோடி மதிப்பில் 1.22 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. பாரபங்கி மாவட்டம், தவுலத்பூர் பகுதியில் அமிதாப்புக்கு ரூ.5.7 கோடி மதிப்பில் நிலம்  உள்ளதாக அந்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.