கோரோனாவால் உலக நாடுகள் சுண்டெலிகளை போல சுருண்டு விழுந்து வருகின்றன. இதனைப்பயன்படுத்தி உலக நாடுகளின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பிற நாட்டு நிறுவனங்களில் சீனா அதிக முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் ஆடிப்போன பல உலக நாடுகள் தங்களது நாட்டில் அந்நிய முதலீடுகளுக்கான விதிகளை கடுமையாக்கி வருகின்றன. கொரோனாவில் இருந்து மீண்டிருக்கும் சீனா தற்போது மற்ற நாடுகளின் நிறுவனங்களை கையகப்படுத்த பெரும் முயற்சி எடுத்து வருகிறது. இதனால், இந்தியா, கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா  உள்ளிட்ட நாடுகள் அந்நிய முதலீடு தொடர்பான விதிகளை தங்களது நாட்டில் மிகவும் கடுமையாக்கி வருகின்றன.

 

இதற்கு மாறாக பிற நாட்டு நிறுவனங்களை வாங்கத்துடிக்கும் சீனா அதிர்ச்சி அடைந்துள்ளது. சீனாவில் செயல்படும் மற்ற நாட்டை சேர்ந்த 1000 நிறுவனங்கள் வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக அந்த நிறுவனங்கள் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிசினஸ் டுடே கட்டுரை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலையில், 300 நிறுவனங்கள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

சீனாவுக்கு மாற்றாக அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா நாடுகள் இந்தியாவை நினைப்பதால், அங்கிருந்து தங்களது நிறுவனங்களை வெளியேற்றி இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த ஆண்டு மத்திய அரசு கார்ப்பரேட் வரிவிகிதத்தினை 25.17 சதவீதமாக குறைத்தது. இது தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் விஷயமாக மாறியுள்ளது.

மறுபுறம் கொரோனாவுக்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி இருக்கிறார். சீனாவில் இருந்து தங்களது நிறுவனங்களை வெளியேற்ற ஜப்பான் 2 பில்லியன் டாலர்களை நிதியாக அறிவித்துள்ளது. சீனாவுக்கு அடுத்து மிகப்பெரிய நாடு என்பதாலும், உள்நாட்டு சந்தை வலுவாக இருப்பதாலும் இந்தியாவில் அமெரிக்கா, ஜப்பான் நிறுவனங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. உள்நாட்டு சந்தை, ஏற்றுமதி இரண்டுக்குமே இந்தியா உகந்த நாடு என்பதை கணித்துள்ள பிற நாடுகளின் பார்வை இந்தியா மீது அழுத்தமாக பதிய ஆரம்பித்துள்ளன. கொரோனா கட்டுக்குள் வந்ததும், சீனாவின் நிலை பரிதாபமாகவும், இந்தியாவின் நிலை படுஜோராகவும் இருக்கும் என அடித்துக் கூறப்படுகிறது.